மருந்துவாழ் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருந்துவாழ் மலை (மருத்துவா மலை)

மருந்துவாழ் மலை (Marunthuvazh Malai) இந்தியாவில் முக்கியமான மேற்குதொடர்ச்சிமலையின் தென்முனை பகுதியில் அமைந்துள்ள குன்று ஆகும். மூலிகை வளம் நிறைந்தது. மருந்துவாழ்மலை, தெய்வேந்திரன் குன்று பெரியகுறைவாய் என்ற முகடுகளை உடையது. குன்றின் உயர்ந்த முகடு 800 அடி உயரமுள்ளது.[1][2].நாகர்கோவில் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.

மருத்துவ மூலிகை வளம் நிறைந்துள்ளதால் மருத்துவாமலை என அழைக்கப்படுகிறது. மலையில் கடல் மட்டத்தில் இருந்து 40 மீட்டர் உயரத்தில் ரிச்சியா சாரியே (Riccia sarieae) என்ற புதிய தாவர இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[3] இது, இந்திய அரசு ஜூன் 2023 இல் வெளியிட்ட பிளாண்ட் டிஸ்கவரி என்ற புத்தகத்தில், 72ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.

அமைவிடம்[தொகு]

ஆசியா கண்டம் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தென்முனையில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி நகரம் அருகே உள்ளது. மக்களுக்கு ஞானம் போதித்த அய்யா வைகுண்டர் உருவாக்கிய அய்யாவழி தலைமை பதியான சுவாமித்தோப்பில் இருந்து 3 கிலோமீட்டர் வடகிழக்கில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவிலிலிருந்து 11 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த குன்றை சுற்றி, பொற்றையடி, மந்தாரம்புதுார், வைகுண்டபதி, கன்னிமார்குன்று, கோட்டவிளை, ஆலடிவிளை, பொட்டல்குளம், புன்னார்குளம் ஆகிய சிற்றூர்கள் அமைந்துள்ளன. மயிலாடி, கொட்டாரம், குலசேகரபுரம், அழகப்பப்புரம், கொட்டாரம் ஆகிய உள்ளாட்சிகளும் உள்ளன. குன்றை சுற்றி பேச்சிப்பாறை அணை பாசனக் கால்வாய்களான தோவாளை சானலில் மருந்துவாழ்மலை பிரதான கால்வாயும், புத்தனாறு பிரதான கால்வாயும் அமைக்கப்பட்டுள்ளன. இவை சுற்றிலும் உள்ள பரப்பை வளப்படுத்துகின்றன.

இயற்கை வளம்[தொகு]

இயற்கை வளம் நிறைந்தது மருந்துவாழ்மலை. கிட்டத்தட்ட 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பில் பரந்துள்ளது. இந்த பகுதியில், 103 வகை பறவை இனங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஏராளமான மருத்துவ தாவரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் முக்கியமாக, கல்லரசு, கல்லிச்சி, மருது, பட்டை விராசு, பூனைங்குரு, டீக்காமல்லி, கருவேல், குடைவேல், கல்லால் போன்ற மரங்களையும்,விழுதி, பூமி சக்கரை கிழங்கு, கருடன் கிழங்கு,செந்தொட்டி, குறுந்தொட்டி, உத்தமதாளி, நிலநெல்லி, மேல்காய் நெல்லி, ஒடுஒடுக்கி,மலை முள்ளங்கி, சீமை நிலவேம்பு, மருந்து கூர்க்கன், கற்பூரவல்லி, துரட்டி, முறிபொருந்தி, மணலிக்கீரை, நித்திய கல்யாணி, நந்நாரி, சித்திரப்பாலை, சிறு தொய்யாக்கீரை, கருந்துளசி, நரிபச்சை, பொன் முசுட்டை, விழால், ஜலஸ்தம்பினி, மலை சிவனார்வேம்பு, பாறைக்கள்ளி, கொடிகள்ளி, சோமவள்ளி, அங்காரவள்ளி, பேராமுட்டி, தேங்காய் பூண்டு, கிரந்தி நாயகம், நல்நெருஞ்சில், நிலச்சடைச்சி, சுருட்டி, கருடி, கொமட்டிக்கீரை, குத்துக்கால் சம்மட்டி, பணப்புல், சந்தணப்புள்ளடி, வில்வம், கல் துயிலிக்கீரை, மரிக்குன்றிமணி, விரக்கைதை, மான் செவிக்கள்ளி, பெருநரளை, கூத்தன் குதம்பை, ஓமவல்லி, கரும்பூலா, வெட்பூலா, பாறையொட்டி, குமரி, செப்பு நெருஞ்சில், தரைப்பசலை, இறச்சிப்பச்சிலை, காட்டு ஆதொண்டை, செம்பருத்தி, மலைக்கல்லுருவி, நற்கொழிஞ்சி, சிறியாநங்கை, பெரியா நங்கை, சிறுகண்பீளை, நேத்திரப்பூண்டு, சதையொட்டி, விஷமூங்கில், திருப்பன்புல், விஸ்ணுகிரந்தி, கருடக்கொடி, அமிர்தவள்ளி, சரக்கொன்றை, செங்கொன்றை, இருவேலிமரம், கழற்ச்சி போன்ற மூலிகைகள் பற்றிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவை, இந்தியகல்விசங்கம் வெளியிடும் ஆய்வு இதழிலும், தி சவுதி ஜேர்னல் ஆப் லைப் சயின்ஸ் என்ற ஆய்விதழிலும் உள்ள கட்டுரைகளில் பதிவாகியுள்ளன.

தொன்மம்[தொகு]

தமிழகத்தில் பல பகுதிகளில் வழங்கப்படும் தொன்மங்களில் மருந்துவாழ்மலை பற்றிய குறிப்புகள் உள்ளன. குறிப்பாக வாய்மொழி ராமாயணக் கதையுடன் தொடர்புபடுகிறது. ராமாயணக்கதையில் ராவணனுடனான போரில் இலட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து சென்றதாக ஒரு கதை உள்ளது. பெயர்த்து சென்றது இந்த மலைதான் என்று வாய்மொழி கதைகளில் கூறப்படுகிறது. வடக்கில் இருந்து பெயர்த்து வந்த போது தமிழ்நாட்டில் சிதறி விழுந்த பல்வேறு துண்டுகளில் இம்மலை ஒன்று என்ற கருத்தும் உள்ளது. இம்மலையின் உயர்ந்த முகட்டில் பாறை வெடிப்புக்குள் பிள்ளைத்தடம் என்ற குகை உள்ளது.

ஆன்மீகம்[தொகு]

இம்மலையின் குகையில் தவம் செய்தவர் பலர். ஸ்ரீ நாராயணகுருவும் தவமிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை. இது ஒருகிலோமீட்டர் பரந்தும் 800 அடி உயர்ந்தும் உள்ளது. இதனருகில் அய்யா வைகுண்டர் தங்கி தவம் செய்து உருவாக்கிய சுவாமிதோப்பு பதி அமைந்துள்ளது. இது அய்யா வைகுண்டர் உருவாக்கிய அய்யாவழி ஆன்மிகத்தில் தலைமை பதியாகும். மருந்துவாழ்மலை குறித்து, அய்யாவழி பக்தர்களின் புனித நூலான அகிலத்திரட்டு குறிப்பிடுகிறது. எனவே அய்யாவழி வழிபாட்டில் இம்மலை புனிதமாக மதிக்கப்படுகிறது.[4] கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை பவுர்ணமியன்று இம்மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். குன்றின் கிழக்கு பகுதி முகடான தெய்வேந்திரன் குன்றிலும் விளக்கு ஏற்றும் வழக்கம், 1990 ஆம் ஆண்டுக்கு பின் உருவாகியுள்ளது.

சாதி, சமய வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மகான் ஸ்ரீ நாராயணகுரு உருவாக்கிய சதயபூஜா சங்க நிர்வாகம் 1992 ஆம் ஆண்டில் ஸ்ரீ நாராயணகுரு தர்ம மடம் ஒன்றை மருந்துவாழ்மலை குன்றின் தெற்கு அடிவாரமான வைகுண்டபதி சிற்றுாரில் அமைத்து தொண்டு செய்துவருகிறது. பிரம்மசாரிகள் வசிக்கும் ஐயப்பசுவாமி மடம் இந்த பகுதியில் செயல்பட்டு வருகிறது. மருந்துவாழ்மலை தென்பகுதியில் உள்ள குகையில் அமர்ந்து மயம்மா கடுந்தவம் செய்தார். தவக்காலம் முடிந்து ஐயப்பசுவாமிகள் மடத்தில் தங்கி தவப்பணிகளை துவங்கினார். பின்னர் கன்னியாகுமரி கடற்கரையில் ஏகாந்த நிலையை அடைந்தார். பிரபல இசையமைப்பாளர் இளையராஜா உட்பட பிரபலங்கள் பலர் இவரது பக்தராக இருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-06-18. பார்க்கப்பட்ட நாள் 2013-01-30.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-09. பார்க்கப்பட்ட நாள் 2013-03-13.
  3. https://bsi.gov.in/uploads/documents/Plant%20Discoveries/Plant%20Discoveries%202022%20for%20upload%20final.pdf
  4. வருடியிருப்பதாலே மருந்து வாழ் மலையில் மருந்து வளரலாச்சே சிவனே அய்யா - சாட்டு நீட்டோலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருந்துவாழ்_மலை&oldid=3960536" இலிருந்து மீள்விக்கப்பட்டது