தேனி - கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையம் என்பது தேனி மாவட்டத் தலைநகரான தேனியில், தேனி - அல்லிநகரம் நகராட்சியால் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையமாகும். இப்பேருந்து நிலையத்தைத் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா 2-1-2014 அன்று காணொலிக் காட்சி வழியாகத் திறந்து வைத்தார். [1]

இந்தப் பேருந்து நிலையத்தில், ஒரே நேரத்தில் 59 பேருந்துகள் நிறுத்துவதற்கான இடவசதிகளுடன் உணவகங்கள், கடைகள், பயணிகள் காத்திருக்கும் அறை, பொருட்கள் வைப்பறை, நவீனக் கழிப்பிடம், முன்பதிவு மையங்கள், வரவேற்பு விசாரணை மையம், காவல் கட்டுப்பாட்டு அறை, ஓட்டுநர் ஓய்வு அறை, தகவல் தொடர்பு அலுவலர் அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து, தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கும், அருகிலுள்ள கேரள மாநிலத்திற்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையத்திலோ அல்லது அருகிலோ சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களுக்கு இயக்கப்படும் தனியார் நிறுவனங்களின் ஆம்னிப் பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்படவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. தேனியில் பென்னிகுயிக் பேருந்து நிலையம்: முதல்வர் ஜெயலலிதா திறந்தார்! (விகடன் செய்தி)