கோராகும்பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோராகும்பார் (Korakumba), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் எனுமிடத்தில் கோயில் கொண்டுள்ள விட்டலர் எனும் கிருஷ்ணரின் பக்தர் ஆவார். குயவர் குலத்தில் 1267-இல் பண்டரிபுரம் அருகே உள்ள தேராதோகி எனும் கிராமத்தில் பிறந்த கோராவிற்கு ஒரு மனைவியும், மழலையும் இருந்தனர். கோராகும்பார் எப்போதும் விட்டலரின் பெயரை உச்சரித்துக் கொண்டே பானைகள் செய்வதற்கு களிமண்ணை கால்களால் பிசையும் வழக்கம் கொண்டவர்.

ஒரு நாள் பானைகளை செய்வதற்கு மெய்மறந்து கால்களால் களிமண்ணை பிசைந்து கொண்டிருந்த போது, தனது குழந்தை தவழ்ந்து வந்து களிமண்ணில் புதைந்து இறந்தது போனது. இதை அறிந்த கோரா கும்பாரின் மனைவி, கணவனிடம் கோபித்துக் கொண்டு, பகவான் விட்டலர் மீது சத்தியமாக தன்னை தீட்டக்கூடாது என்றார். விட்டலர் மீது சத்தியம் செய்ததால், அன்று முதல் மனைவியை தீண்டுவதில்லை என உறுதி பூண்டார்.

இந்நிலையில் புத்திர வாரிசு வேண்டி, தன் மனைவி, தனது தங்கை இராமியை இரண்டாவதாக கோரா கும்பாருக்கு திருமணம் செய்து வைத்தாள். கோரா கும்பார் இரண்டாவது மனைவியையும் தீண்டவில்லை. எனவே ஒரு நாள் இரவு அக்காவும், தங்கையும் சேர்ந்து படுத்திருந்த கோரா கும்பாரை தொட்டனர். இதனை அறிந்து பதறிய கோராகும்பார், தான் செய்த வாக்குறுதி மீறப்பட்டதால், தனது இரு கைகளையும் தானே வெட்டிக் கொண்டார்.

ஒரு முறை ஆடி மாத ஏகாதசி அன்று தனது இரு மனைவிகளை அழைத்துக் கொண்டு பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயில் திருவிழாவிற்கு யாத்திரையாகச் சென்றார். கோயிலில் பக்தர்கள் தம்புராக்களைக் கொண்டு இசைத்தும், ஜால்ராக் கட்டைகளையும் தட்டிக் கொண்டும், பகவான் விட்டலரின் நாம சங்கீர்த்தனகளை பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருந்தனர்.

இதனை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கோரா கும்பார் மெய்மறந்து, தன்னை அறியாமல் இரு கைகளையும் தலைக்கு உயரே உயர்த்திக் கொண்டு விட்டலரின் நாமவளிகளை பாடிக்கொண்டே ஆடினார். கோரக்கும்பாருக்கு கைகள் முளைத்துள்ளதை அவரது மனைவிகள் கண்டு வியந்தனர். அது முதல் கோரா கும்பர், தனது இரு மனைவிகளுடன் விட்டலரின் பெருமைகளைப் பாடிக் கொண்டே இல்லறம் நடத்தினர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. கோராகும்பார்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோராகும்பார்&oldid=3031804" இலிருந்து மீள்விக்கப்பட்டது