காரைச்சூரான்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காரைச்சூரான்பட்டி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்.

மருங்காபுரி தொடர்பு[தொகு]

மருங்காபுரி வீரப்பூச்சிய நாயக்கர் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர் இயற்றினார். இப்பிள்ளைத்தமிழின் நயங்கண்ட மருங்காபுரி வீரப்பூச்சிய நாயக்கர் கண்ணமங்கலப்பட்டி, காரைச் சூரான்பட்டி ஆகிய ஊர்களைச் சருவமானியமாக அழகிய சிற்றம்பலக்கவிராயருக்கு வழங்கினார்.[1] இச்செய்தியைக் கீழ்க்காணும் பாடலும் உறுதிப்படுத்துகிறது

"திருவள ரிந்திரன் வீரப்பூச்சய சாமி யெங் கோன்

பொருணிறை பிள்ளைத் தமிழ்ப்பிர பந்தம் புகன்றதற்காய்

அருள்கொள் சிற்றம்பல வாணர்க்குக் காரைச் சூரான்பட்டியும்

வருகண்ண மங்கலப் பட்டியு

மீய்ந்தனன் வாழியவே'

(ஓலைநாயகன், கல்வெட்டு, காலாண்டிதழ், ப-21)[2]

புதுக்கோட்டை தொடர்பு[தொகு]

பின்னாளில் இவ்வூர் புதுக்கோட்டை சமஸ்தானத்துடன் இணைந்தது. இன்று வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வருகிறது. தொண்டைமான் காலத்திய முக்கிய இலக்கிய கலை வடிவங்களில் மிதிலைப்பட்டி மற்றும் காரைச்சூரான்பட்டி கவிராயர்களின் படைப்புகளும் அடக்கம் என்று Manual of Pudukkottai நூலில் தொகுப்பாசிரியர் K. R. வெங்கட்ராமய்யர் குறிப்பிடுகிறார்.[3]

மிதிலைப்பட்டி தொடர்பு[தொகு]

மிதிலைப்பட்டிக்கும் இவ்வூருக்கும் நகரத்தார்கள் மற்றும் கவிராயர்கள் மூலம் நீண்ட கால தொடர்பு இருந்து வருகிறது. மிதிலைப்பட்டிப் புலவரான குமாரசாமிக் கவிராயர் மிதிலைப்பட்டி ஆதிசிற்றம்பலக் கவிராயர் கவி பாடி பரிசில் பெற்ற ஊர்களைப் பற்றிப் பாடும்போது இவ்வாறு சொல்கிறார்.

"வாங்கின பூமி வழுத்துவேன் நான்சிலது

பாங்கான பூசாரி பட்டிசெம் மலவுபட்டி

அடுத்தபுல வன்குடியு மாககவி ராயர்பட்டி

கொடுத்த கொத்த மங்கலமும் கோனாடு பட்டியுடன்

மறவணி யேந்த லென்றும் மண்மேட்டுப் பட்டி யென்றும்

திறமான செவ்வூ ரென்றுந் தேனாட்சி பட்டியுடன்

காரைச்சூரான் பட்டியும் கருகைப்பிலான் பட்டியும்'

(குமாரசாமிக்கவிராயர், சுசீலவள்ளல் அம்மானை, ப-102.)

பூசாரிபட்டி, செம்மலவுபட்டி, புலவன்குடி, கவிராயர்பட்டி, கொத்தமங்கலம், கோனாடுபட்டி, மறவணியேந்தல், மண்மேட்டுப்பட்டி, செவ்வூர், தேனாட்சிபட்டி காரைச்சூரான்பட்டி, கருகைப்பிலான்பட்டி என்பன ஆதிசிற்றம்பலம் பெற்ற ஊர்கள் என்று இப்பாடலின் மூலம் தெரிகிறது.[2]

மானியமாகப் பெற்ற இந்த ஊரில் ஆதி சிற்றம்பலக் கவிராயரின் தம்பி முத்துச்சிற்றம்பல கவிராயரின் கொடிவழியினர் வாழ்ந்து வருகின்றனர். தொண்டைமான் காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற படைப்புகளில் மிதிலைப்பட்டி மற்றும் காரைச்சூரான்பட்டி கவிராயர்களின் படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.[4]

உ.வே.சா வருகை[தொகு]

சுவடிகளை நூல்களாகப் பதிப்பிக்கும் பணியில் இருந்த தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதையர் மிதிலைப்பட்டிக்கு வருகை தந்து அழகிய சிற்றம்பலக் கவிராயருடன் ஒரு வேண்டுகோள் வைத்தார். "இன்னும் இந்தப் பக்கங்களில் ஏட்டுச் சுவடிகள் கிடைக்கும் இடம் இருந்தால் சொல்லவேண்டும்" என்றார். "இங்கே அருகில் செவ்வூரில் எங்கள் உறவினர் இருக்கின்றனர் . எங்கள் பரம்பரையிலிருந்து ஒரு கிளை அங்கே போயிருக்கின்றது. அங்கும் இவற்றைப் போன்ற ஏடுகளைக் காணலாம். மற்றொரு கிளை காரைச் சூரான்பட்டியில் இருக்கிறது. இப்போது கடுங்கோடையாக இருப்பதால் அங்கே உங்களால் போவது சிரமம்" என்று கவிராயர் பதில் அளித்தார்.[5]

செவ்வூர் சென்று சுவடிகளைப் பெற்ற ஐயரவர்கள் காரைச்சூரான்பட்டிக்குத் தன் 82ஆம் அவகையில் வருகை தந்தார். கவிராயர் வீட்டில் இருந்து பின்வரும் செய்யுள்கள் கிடைத்தன[6].

  1. புறத்திரட்டு ஒன்று
  2. புல்வயல் குமரேசர் பணவிடுதூது ஒன்று

புல்லைக் குமரேசர் பணவிடுதூது புதுக்கோட்டை மாவட்டம் குமரமலையில் உள்ள முருகக் கடவுளின் பால் பாடப்பட்டது. இதனை மீனாட்சிக் கவிராயர் என்கிற குருபாததாசர் இயற்றினார்[7]. புறத்திரட்டு பாடலில் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

உவேசா அவர்களின் காலம் 1855 முதல் 1942 வரை. அவருடைய 82வது வயதில் இந்த ஊருக்கு வந்தார்.[6] அப்படிப் பார்க்கையில் இந்த நிகழ்வு 1937 ஆம் ஆண்டு நிகழ்ந்திருக்கவேண்டும்.

  1. கோ, உத்திராடம் (12/07/2020). "கல்வெட்டுகள் காட்டும் சிற்றிலக்கியங்கள்". Dinamani. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. 2.0 2.1 முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி. மிதிலைப்பட்டிக் கவிராயர்கள் வாழ்வும் வாக்கும். சிங்கப்பூர்: தருமு பதிப்பகம்.
  3. K. R., Venkatarama Ayyar (Chennai : Commissioner of Museums, Government of Tamil Nadu , 2002). "Manual of Pudukkottai State". Manual of Pudukkottai State Volume II Part I (Second and revised edition): 869. 
  4. "Manual of Pudukkottai State". Manual of Pudukkottai State (Commissioner of Museums, Government of Tamilnadu) Volume II Part I: 869. 2002. https://archive.org/stream/dli.chennai.145/MANUAL%20OF%20PUDUKKOTTAI%20STATE%20VOLUME%20II%20PART%20I_djvu.txt. 
  5. மஹாமஹோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதயரவர்கள் (1950). என் சரித்திரம். சென்னை: கபீர் அச்சுக்கூடம். p. 963.
  6. 6.0 6.1 அனந்தன் (December 1990). நாம் அறிந்த கி.வா.ஜ. சென்னை: அல்லயன்ஸ் கம்பெனி.
  7. "புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சார்ந்த அருள்மிகு குமரமலை தண்டாயதபாணி திருக்கோயில் தல வரலாறு". திருக்கோயில் ஜனவரி 2002: 20. Jan 2002. https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0005379_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_2002.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரைச்சூரான்பட்டி&oldid=3967191" இலிருந்து மீள்விக்கப்பட்டது