ஆவணி அவிட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர் விஸ்வகர்மா மற்றும் செட்டியார் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் கடைபிடிக்கும் வழிபாடாகும். சமசுகிருதத்தில் இது உபாகர்மா என வழங்கப்படுகிறது. இதன் பொருள் தொடக்கம் எனபதாகும். இன்றைய தினம் வேதங்களை படிக்க துவங்க நல்லநாள் எனக் கொள்ளலாம்.[1][2][3]

வேதங்களும் உபாகருமமும்[தொகு]

உபாகர்மம் பொதுவாக ஆடி/ஆவணி (சிரவண) மாதத்தின் பௌர்ணமி நாளில் நடைபெறுகிறது. ஆனால் ஒருவரின் வேத பிரிவு கிளையின் அடிப்படையில் நாட்கள் வேறுபடும். வேதங்களாவன இருக்கு, யஜுர், சாம, அதர்வணம் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பழையகாலத்திலிருந்து மக்கள் தங்களை இந்தப் பிரிவுகளுள் ஒன்றுடன் இணைத்துக் கொண்டுள்ளனர். அவர்களது பரம்பரையினர் அந்தந்த வேதப் பிரிவைச் சார்ந்திருப்பார்கள். அதன்படியே தங்கள் புனிதச் சடங்குகளைச் செய்து வருவார்கள்.

சிராவண மாதம் என்பது ஆடி அமாவாசையில் தொடங்கி, ஆவணி அமாவாசை வரை உள்ள காலமாகும். இந்தச் சிராவண மாதத்தில் வரும் அவிட்டம் நட்சத்திரம் பௌர்ணமி நாள் யஜுர் வேதிகளுக்கு உபாகர்மம் நடக்கும். இதே சிராவண மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்திலன்று ரிக் வேதிகளின் உபாகருமமும், அடுத்த மாதத்தில் வரும் அஸ்த நட்சத்திரத்தன்று சாம வேதிகளின் உபாகர்மமும் நடக்கும். (இது அநேகமாக பிள்ளையார் சதுர்த்தி அன்றோ அல்லது அதற்கு ஒரு நாள் முன், பின்னேயோ வரும்.)

ஆவணி அவிட்டம் பெயர்[தொகு]

தமிழ் நாட்டில் மிகப் பெரும்பாலானோர் யஜுர் வேதிகளாக இருப்பதாலும், அவர்கள் அவிட்டம் நட்சத்திரத்தில் உபாகர்மம் மேற்கொள்வதாலும் தமிழில் உபாகர்மத்துக்கு "ஆவணி அவிட்டம்" என்றே பொதுவாகச் சொல்லப்படுகிறது.

நாள் சிறப்பு[தொகு]

இது ஓர் கூட்டுவழிபாடு ஆகும். இந்நாளில் அனைவரும் ஆற்றங்கரையிலோ குளக்கரையிலோ குளித்து இத்தகைய சடங்கினை உருவாக்கிய இருடிகளுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வர். தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு தங்கள் வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர்.

காயத்ரி ஜபம்[தொகு]

உபாகர்மம் நடந்த அடுத்த நாள் காயத்ரி ஜபம் என்னும் மந்திரத்தை உச்சாடனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். காயத்ரி மந்திரத்தை 1008 தடவைகள் உச்சாடனம் செய்யவேண்டும். இதனை கூட்டு வழிபாடாகச் செய்யும்போது எத்தனை பேர் பங்கேற்கிறார்களோ அந்த எண்ணிக்கையால் 1008 ஐ வகுத்து அத்தனை தடவைகள் எல்லோரும் சேர்ந்து சொல்வார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sastri, S. M. Natesa (1903). Hindu Feasts, Fasts and Ceremonies (in ஆங்கிலம்). Printed at the M.E. publishing house. p. 10.
  2. Brouwer, Jan (1995). The Makers of the World: Caste, Craft, and Mind of South Indian Artisans (in ஆங்கிலம்). Oxford University Press. p. 558. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-563091-6.
  3. Iyer, N. P. Subramania (1991). Kalaprakasika (in ஆங்கிலம்). Asian Educational Services. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0252-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவணி_அவிட்டம்&oldid=3889467" இலிருந்து மீள்விக்கப்பட்டது