திரிவித பாலயா நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிவித பாலயா நடவடிக்கை
ஈழப் போர் பகுதி
நாள் 13 செப்டம்பர் 1990
இடம் யாழ்ப்பாணம், இலங்கை
யாழ்ப்பாணக் கோட்டை முற்றுகையை முறியடிப்பதில் இலங்கை இராணுவம் வெற்றி பெற்றது
பிரிவினர்
இலங்கை இலங்கை ஆயுதப் படைகள்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ வேலுப்பிள்ளை பிரபாகரன்

திரிவிதா பாலயா நடவடிக்கை (Operation Thrividha Balaya) என்பது இலங்கை இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கையாகும். யாழ்ப்பாணத்தில் உள்ள பழைய டச்சு யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்த இலங்கை இராணுவப் படையின் மீதான புலிகளின் முற்றுகையை உடைக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பின்னணி[தொகு]

தமிழீழ விடுதலைப் புலிகள் 1990 ஆம் ஆண்டு இலங்கை காவல்துறை அதிகாரிகளின் படுகொலையுடன் அரசாங்கத்துடனான சமாதான பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்டனர். பின்னர், தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையங்களைக் கைப்பற்றினர். ஜே. வி. பி எழுச்சியை அடக்குவதற்குத் தென் இலங்கைக்கு இலங்கையின் தொழில்முறை துருப்புக்கள் அனுப்பப்பட்டிருந்த நிலையில். விடுதலைப் புலிகள் வடக்கு-கிழக்கில் போருக்கு ஆயத்தமில்லாமலிருந்த இராணுவப் பிரிவுகளுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கினர். விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். ஆனால் யாழ்ப்பாணக் கோட்டை இலங்கை இராணுவத்தின் வசமே இருந்தது. அவ்வளவு பெரிய கோட்டையைக் காப்பதற்குத் தேவையான எண்ணிக்கையில் வீரர்கள் இல்லாத நிலையில், 172 பேரைக் கொண்டு தாக்குப்பிடித்தபடி அவர்கள் இருந்தனர். யாழ்ப்பாண வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் பெறுமதியான பொருட்களையும் கோட்டைக்கு இராணுவத்தினர் கொண்டு சென்றிருந்தனர்.[1][2]

இரண்டாம் ஈழப்போர் துவங்கிய நிலையில் யாழ்ப்பாண நகரைக் கைப்பற்றுவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முதலாவது கூட்டு ஆயுதத் தாக்குதலான திரிவிட பலயவை துவக்குவதற்கு சனாதிபதி ரணசிங்க பிரேமதாச அனுமதியளித்தார். முற்றுகையிடப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டையின் லெப்டினன்ட் ஜெயந்த பெர்னாண்டோ தலைமையிலான துருப்புக்கள் மற்றும் காவல்துறையினரை மீட்பதற்கும், இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பலத்துடன் யாழ்ப்பாண நகரத்தை மீட்பதற்கும் மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவினால் திட்டங்கள் வகுக்கப்பட்டன. லெப்டினன்ட் கேணல் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான 1ஜி.ஆர் மற்றும் மற்றும் லெப்டினன்ட் கேணல் சரத் பொன்சேகா தலைமையிலான 1 எஸ்.எல்.எஸ்.ஆர் துருப்புக்கள் யாழ்ப்பாணக் கோட்டை முற்றுகையை முறியடித்து யாழ்ப்பாண நகரத்தை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மீட்கும் பணியை மேற்கொண்டன. வடக்கு கடற்படை பகுதியின் கட்டளைத் தளபதி கேப்டன் ஏ. எச். எம் ரஸீக் துருப்புக்களின் தரையிறக்கத்தைத் திட்டமிட்டார். வடக்கு வலய இலங்கை இராணுவப் படைத் தளபதி டபிள்யூ. சுனில் கப்ரால் வான்படை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்றிருந்தார்.[1][3][2]

நடவடிக்கை[தொகு]

1990 ஆம் ஆண்டு ஆகத்து மாத இறுதியில் இலங்கை இராணுவம் ஊர்காவற்துறை தீவை ஒருங்கிணைக்கப்பட்ட நீர்நில மற்றும் வான்வழிப் படைகளுடன் தாக்கி இந்த நடவடிக்கையைத் தொடங்கியது. லெப்டினன் கேணல்களான கோட்டபாய ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேகாவின் தலைமையில் கஜபா படையணியின் முதல் பட்டாலியனும், இலங்கை சிங்கப் படையணியின் முதல் பட்டாலியனும் ஊர்காவற்துறையை அழித்து, மண்டைதீவுக்கு வந்து 80 விடுதலைப் புலிகளைக் கொன்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க முன்னணிக்குப் பறந்தார். முதல் கட்டத் தாக்குதலுக்கான ஏவுதளமாக மண்டைதீவு பயன்படுத்தப்பட இருந்தது.[1][3]

யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் மண்டைதீவை இணைக்கும் ஒரு தரைப்பாலம் இருக்கும் நிலையில், அதைப் பெரிதும் சேதப்படுத்த முடியும் என்பதால், அந்த நேரத்தில் கடற்படைக்கு அதிக தீவிரமான சூடுகளை நடத்தக்கூடிய சிறிய படகுகளைப் பயன்படுத்தி பெரிய நீர்நில தாக்குதல்களை நடத்திய அனுபவம் இல்லாத போதிலும் கண்ணாடியிழை படகுகளை பயன்படுத்தினர். விடுதலைப் புலிகளின் கடும் துப்பாக்கிச் சூட்டுக்கு இடையில் இலங்கை கடற்படையின் கண்ணாடியிழை படகுகளைப் பயன்படுத்தி செப்டம்பர் 13 அதிகாலை காயல் வழியாகத் துருப்புக்களைக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கை துவங்கியது. கடற்படை படகுகள் லெப்டினன்ட் ரொஹான் அமரசிங்க தலைமையில் செயல்பட்டன. துருப்புக்களின் முதல் அலையானது கேப்டன் உதய பெரேரா தலைமையிலான 1 ஜி.ஆரின் ஆல்பா கம்பெனி மற்றும் கேப்டன் போனிஃபேஸ் பெரேரா தலைமையிலான 1 எஸ். எல். எஸ். ஆரின் டெல்டா கம்பெனி படைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இலங்கை கடற்படை, கடும் துப்பாக்கிச் சூட்டுக்கு இடையில் 200-க்கும் மேற்பட்ட துருப்புகளை கடற்காயல் வழியாக கொண்டு சென்றன. இதன் மூலம் யாழ்ப்பாணக் கோட்டை முற்றுகையைப் படைகள் வெற்றிகரமாக முறியடித்தன. 1 ஜி. ஜி.ஆரின் ஆல்பா கம்பெனி படைகள் பின்னர் பண்ணை போலீஸ் குடியிருப்பைக் கைப்பற்ற இருந்தது, அதே நேரத்தில் தொலைத்தொடர்பு கட்டிடத்தைக் கைப்பற்ற இருந்தது. ஆனால் இரண்டு நோக்கங்களும் வெற்றி பெறவில்லை. மேலும் ஒரு எஸ். எஃப் -260 டி. பி.50 காலிபர் விமானத்து சுடப்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது. பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், மண்டைதீவைக் கைப்பற்றிய உடனேயே துருப்புக்கள் காயலைக் கடந்திருந்தால் இலங்கை இராணுவம் தனது முயற்சிகளில் வெற்றி பெற்றிருக்கும், ஆனால் காயலைக் கடப்பதை இரண்டு வாரங்களுக்கு மேல் தாமதப்படுத்தியதன் விளைவாக மண்டைதீவு வீழ்ச்சியால் புலிகளின் படைகளில் ஏற்பட்ட குழப்பத்தால் உண்டான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளத் தவறியதாக குறிப்பிட்டார்.[3][2]

"சூசைட் எக்ஸ்பிரஸ்" என்று பெயரிடப்பட்ட ஒரு நடவடிக்கையில் கேப்டன் ஃபாஸ்லி லாபீர் தலைமையிலான ஒரு சிறப்புப் படையின் துருப்புக்களால் உணவு மற்றும் பிற பொருட்கள் கோட்டைக்குள் கொண்டு செல்லப்பட்டன. கடும் துப்பாக்கிச் சூட்டுக்கு இடையில் யாழ்ப்பாணத்திலிருந்து படையினரை வெளியேற்றக் கடற்படையினர் பாடுபட்டனர். வெளியேற்றத்தின் கடைசி நாளில் பணம், நகைகள் போன்றவை ஏற்றப்பட்ட படகுகள் கிட்டத்தட்டக் கைவிடப்பட்டதால், சப் லெப்டினன்ட், நொயல் கலுபோவிலா மற்றும் இரண்டு போலீசார் திரும்பி வந்து அவர்கள் அந்தப் படகுகளை மீட்டெடுக்க வேண்டியிருந்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Moorcraft, Paul L. Total destruction of the Tamil Tigers : the rare victory of Sri Lanka's long war. Barnsley, South Yorkshire. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78383-074-9. இணையக் கணினி நூலக மைய எண் 865026030.
  2. 2.0 2.1 2.2 2.3 "Suicide express -War on terror revisited Part 155". pdfs.island.lk. பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
  3. 3.0 3.1 3.2 "More on Thrivida Balaya - War on terror revisited Part 153". pdfs.island.lk. பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிவித_பாலயா_நடவடிக்கை&oldid=3957511" இலிருந்து மீள்விக்கப்பட்டது