சீமி மோட்டோகியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீமி மோட்டோகியோ (Zeami Motokiyo, 世阿弥 元清; c. 1363 – c. 1443)என்றும் கான்சே மோட்டோகியோ (Kanze Motokiyo, 観世 元清)என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் சப்பானிய அழகியலாளர், நடிகர், மற்றும் நாடகாசிரியருமாவார். இவரது தந்தை கனாமி இளம் வயதிலேயே நோ என்ற நாடகங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அச்சமயத்திலேயே தமது மகனின் நடிப்புத்திறனை கண்டறிந்தார். அவர்களது குடும்ப நாடகக்குழு புகழ்பெற்று வருகையில் சீமிக்கு அக்காலத்தில் சப்பானின் சர்வாதிகாரியாக விளங்கிய இராணுவத் தளபதி (ஷோகன்) ஆஷிகாஃகா யோஷிமிட்சு எதிரில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. இளம் சீமியின் நடிப்பால் கவரப்பட்ட ஷோகன் தனது அரசவைக்கு அறிமுகப்படுத்தியதுடன் சீமிக்கு செவ்விலக்கியத்திலும் மெய்யியலிலும் கல்வி கற்க ஏற்பாடு செய்தார். 1385யில் தனது தந்தையின் மறைவிற்குப் பின்னர் தமது குடும்ப நாடகக்குழுவை தொடர்ந்து நடத்தினார்; பெரும் வெற்றியும் கண்டார்.

சீமி தமது ஆக்கங்களில் செவ்வியலையும் நவீனத்தையும் கலந்து சப்பானிய,சீன மரபுப்படி எழுதினார். பல சென் போதனைகளை தமது படைப்புக்களில் கையாண்டார். இதனால் பிற்காலத்திய ஆய்வாளர்கள் இவருக்கு சென் புத்தமதத்தில் ஈடுபாடு உண்டோ என ஐயுற்றனர். இவர் எழுதிய நாடகங்களின் எண்ணிக்கை குறித்து அறிய இயலாவிடினும் 30இலிருந்து 50 நாடகங்கள் வரை எழுதியிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. இவர் நாடகத்துறை பற்றி எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் சப்பானிய இலக்கியத்தில் நாடக மெய்யியல் குறித்தான தொன்மையான படைப்புகளாக விளங்குகின்றன. ஆனால் இவை இருபதாம் நூற்றாண்டில் தான் பொதுமக்களுக்கு எட்டியது.

யோஷிமிட்சுவின் மறைவிற்குப் பின் வந்த ஆஷிகாஃகா யோஷிமோச்சி சீமியின் நாடகங்களுக்கு ஆதரவு தரவில்லை. இருப்பினும் பெருந்தனவந்தர்களின் புரவலில் தமது நாடகங்களைத் தொடர்ந்தார். சப்பானிய சமூகத்தில் நன்கு அறியப்பட்டவராகவும் மதிப்புமிக்கவராகவும் விளங்கினார். அடுத்து ஷோகனாக பதவியேற்ற ஆஷிகாஃகா யோஷிநாரி சீமியுடன் எதிரியானார். சீமியின் மருமகன் ஒன்னாமியிடம் நாடகக்குழுத் தலைமையை ஒப்படைக்க கட்டாயப்படுத்தினார். இதற்கு இணங்க மறுத்ததாலோ பிற காரணங்களாலோ சீமியை சாடோ தீவிற்கு நாடு கடத்தினார். யோஷிநாரியின் மரணத்திற்குப் பின்னர் சீமி மீண்டும் சப்பானிய நாட்டிற்குத் திரும்பினார். 1443ஆம் ஆண்டில் மறைந்தார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமி_மோட்டோகியோ&oldid=3860796" இலிருந்து மீள்விக்கப்பட்டது