இலங்கையில் மீன்பிடித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையில் மீன்பிடித்தல், இலங்கை இயற்கையான கடல் வளத்தை கொண்டுள்ளதாலும் இதை பயன்படுத்த சாதகமாக நிலை காணப்படுவதாலும் நடைபெறுகின்றது. இலங்கை தீவாக இருப்பதனாலும் இதனைச்சுற்றி நான்கு புறமும் கடல் வளம் இருப்பதாலும் இங்கு மீன்பிடி இடம்பெறுவது இலாபகரமான ஒன்றாகும்.

சாதகமான நிலமைகள்[தொகு]

இலங்கையின் கரையோரம் 1367 கிலோ மீட்டர் நீளமானது. இங்கு கரையோர மீன்பிடி கரையிலிருந்து சுமார் முப்பது கிலோ மீட்டர் தூரத்திற்கு நடை பெறுகின்றது. ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகுகளின் உதவியுடன் சுமார் 75 கிலோமீட்டர் தூரம் வரை இடம்பெறுகின்றது. இலங்கைக் கடலில் 80000 சதுர கிலோ மீட்டர்களில் மீன் பிடிக்கலாம்.

இலங்கை ஒரு கண்ட மேடையில் அமைந்திருப்பது இங்கு மீன்பிடி சிறப்பாக இடம்பெற பேருதவியாக உள்ளது. இந்தக் கண்டமேடை கரையிலிருந்து சுமார் 15 கி.மீ. தொடக்கம் 30 கி.மீ. வரை நீண்டிருக்கிறது. இந்தக்கண்ட மேடை தென்புறத்தில் ஒடுங்கியதாகவும் வடக்கே விரிந்ததாகவும் காணப்படுகின்றது. கண்ட மேடையின் அடித்தளங்கள் சூரிய வெப்பத்தை போதுமான அளவு பெறுவதால், இது மீன்கள் வாழ ஏற்ற இடமான பிளாங்ரன் போன்ற உணவுகளைக் கொண்டுள்ளது. இந்தக் கண்ட மேடை மீன்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவான வெப்பத்தையும் மறைந்து வாழத்தக்க சூழ்நிலைகளையும் கொண்டுள்ளது.